புண்ணிய பூமி காசி

Ganga AArti

காசியின் சிறப்புகள்

காசியை நினைக்க முத்தி; காசியென்றுரைக்க முத்தி

காசியைக் காண முத்தி; காசியைச் சூழ முத்தி

காசியில் வசிக்க முத்தி; காசியைக் கேட்க முத்தி

காசியில் வசிப்போர் தம்மைக் கண்டுதாழ்ந் திடுதின் முத்தி

என்று காசியின் பெருமையைப் புகழ்ந்துரைக்கிறது ‘காசி ரகசியம்’ என்னும் நூல். காசி மிகப் பழமையான நகரம். இராமாயண, மஹாபாரத காலத்திற்கு முன்பிருந்தே மிகவும் புகழ் பெற்றிருந்த நகரம். ‘ஆனந்த வனம்’ என்ற பெயரும் இப்புராதன நகருக்கு உண்டு. சிவன் மிகவும் ஆனந்தத்துடன் தங்கியிருக்கும் தலம் என்பதால் இப்பெயர். ‘அவிமுக்தம்’என்ற பெயரும் உண்டு. நிச்சயமாக முக்தியைத் தர வல்ல தலம் இது. வாராண். அஸ்ஸி என்னும் இரு நதிகளும் இங்கு வந்து கங்கையுடன் கலப்பதால் ‘வாரணாசி’என்ற பெயரும் இத்தலத்திற்கு உண்டு. இங்கிருக்கும் காசி விஸ்வநாதர் ஆலயம் மிகப் பழமையானது. வரலாற்றுச் சிறப்பு மிக்கது.

காசியின் சிறப்புக்கும் பொலிவிற்கும் மற்றொரு காரணமாக விளங்குவது கங்கை நதி.

கங்கை நதியின் பெருமையை,

“தேவி ஸுரேஸ்வரி பகவதி கங்கே

த்ரிபுவந தாரிணி தரல தரங்கே

ஸங்கர மௌலி விஹாரிணி விமலே

மமமதிர் ஆஸ்தாம் தவபத கமலே”

என்று புகழ்கிறது கங்காஷ்டகம்.

காசி யாத்திரை

சுற்றுலா என்பதற்கும் யாத்திரை என்பதற்கும் அடிப்படையில் வேறுபாடுண்டு. சுற்றுலா என்பது கேளிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து மேற்கொள்வது. யாத்திரை என்பது முழுக்க முழுக்க பக்தி, ஆன்மிகம், சடங்குகள், இறைவழிபாடு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது.

 பண்டைக் காலம் தொட்டே யாத்திரை என்பது ஹிந்துக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. யாத்திரைகள் பல இருந்தாலும் ‘காசி யாத்திரை’ புனிதமானதாகக் கருதப்படுகிறது. காசிக்குச் சென்று கங்கையில் நீராடினால் பாவங்கள் தொலைந்து விடும் என்ற நம்பிக்கை காலம் காலமாக இருந்து வருவதே இதற்குக் காரணம்.

காசி யாத்திரை முறைகள்

காசி யாத்திரையை நாம் முதலில் இராமேஸ்வரத்தில் துவங்க வேண்டும். அங்குள்ள அக்னி தீர்த்தத்தில் புனித நீராடி, ஆலயத்தில் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடி பின் இறைவனை வேண்டி, சேதுக்கரையில் மணலால் லிங்கம் செய்து பூஜித்து யாத்திரையைத் துவங்க வேண்டும்.

காசியின் பெருமைகள்

“தர்ஸனாத் அப்ரஸதசி

ஜனனாத் கமலாலயே

காச்யாந்கி மரணான் முக்த்தி

ஸ்மரணாத் அருணாசலே:”

என்கிறது துதி. “கயிலையைக் கண்டால் முக்தி. திருவாரூரில் பிறந்தால் முக்தி. காசியில் மரணமடைந்தால் முக்தி. அருணாசலத்தை நினைத்தாலே முக்தி.” என்பது இதன் பொருள். காசித் தலத்தில் மரணமடைந்தவர்களை அன்னை விசாலாட்சி தன் மடியில் தாங்கிக் கொள்ள, ஈஸ்வரன் அம்மரணமுற்றவர்களின் காதுகளில் ராம நாமத்தை ஓதி, முக்தி அளிப்பதாக ஐதீகம். இங்கு வந்து மரணமடைய வேண்டும் என்பதற்காகவே இங்கு வந்து தங்கி தமது இறுதி நாட்களைக் கழிப்பவர்கள் பலர். இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த காசியில் கங்கை நதியில் நீராடி முறைப்படி புனிதச் சடங்குகளைச் செய்ய வேண்டும். அதற்கு அங்குள்ள புரோகிதர்கள் உதவுவர். சங்கர மடம், குமாரசாமி மடம், நாட்டுக்கோட்டை நகரத்துச் செட்டியார் சத்திரம் போன்றவையும் யாத்திரை செய்ய வரும் மக்களுக்கு தங்குமிடம், உணவளித்து, நீத்தார் சடங்குகள் போன்றவை செய்ய உதவுகின்றன.

காசி ஆலயங்கள்

சடங்குகளை முறையாகச் செய்து விட்டு இறைவழிபாட்டிற்குச் செல்லலாம். பக்தர்களுக்கு அருள் புரிவதற்காகவே காசியில் சிவன், விஷ்ணு, துர்க்கை, விநாயகர், ஆஞ்சநேயர், பைரவர் என பல மூர்த்தங்கள் எழுந்தருளியிருக்கின்றனர். பல நூற்றுக்கணக்கான ஆலயங்கள் காசியில் அமைந்துள்ளன. அவற்றுள் தரிசிக்க வேண்டிய முக்கிய தெய்வங்களைப் பற்றி

விஸ்வேசம் மாதவம் டுண்டிம்

தண்டபாணிம்ச பைரவம் |

வந்தே காசீம் குஹாம் கங்காம்

பவானீம் மணிகர்ணிகாம் ||

என்கிறது ஸ்லோகம்.

விஸ்வநாதர் ஆலயம்

viswanathar temple entrance

‘விஸ்வேசம்’ என்று குறிப்பிடப்படுவது காசி விஸ்வநாதரை. இந்தியாவின் முதன்மையான ஜோதிர்லிங்கத் தலம் இது. இஸ்லாமியர்களின் தொடர் படையெடுப்பால் தொன்மையான ஆலயம் அழிக்கப்பட்டது. தற்போது உள்ள ஆலயத்தை 1785ல் மகாராணி அகல்யா பாய் கட்டினார். ஆலயத்தின் உள்ளே நேபாள அரசரால் வழங்கப்பட்ட ஒரு பெரிய மணி உள்ளது. இந்த மணியின் நாதம் வெகு தொலைவிற்கு ஒலிக்கும் என்பது இதன் சிறப்பம்சம். ஆலயத்தின் உள்ளே உள்ள கிணற்றில் பழமையான லிங்கம் வைக்கப்பட்டிருப்பதாய் ஐதீகம்.

காலை 3.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை திறந்திருக்கும் இவ்வாலயத்தின் வழிபாடு சிறப்புமிக்கது. நாமே நம் கையால் தொட்டு வணங்கலாம் என்பதும், அபிஷேகம், பூஜை செய்யலாம் என்பதும் இதன் முக்கியச் சிறப்பு. இரவில் நடக்கும் சப்தரிஷி பூஜை மிகமுக்கியமானது. அந்த வழிபாட்டிற்கான பூசை பொருட்கள் காசி நகரத்தார் சத்திரத்திலிருந்து எடுத்துச் செல்லப்படுகின்றன.

bindhu madava

 

பிந்து மாதவர் ஆலயம்

‘மாதவம்’ என்பது பிந்து மாதவரைக் குறிக்கும். இராமேஸ்வரத்தில் சேது மாதவராகவும், திரிவேணி சங்கமத்தில் வேணி மாதவராகவும் எழுந்தருளியிருக்கும் விஷ்ணு, காசியில் பிந்து மாதவராகக் காட்சி தருகிறார். இவரது ஆலயம் பஞ்ச கங்கா காட்டில் அமைந்திருக்கிறது. பிரம்மா வழிபட்ட சிறப்புக்குரியவர். சங்கு, சக்கரத்துடன் கதாயுதம் ஏந்திக் காட்சி தருகிறார். ஆலயத்திற்கு வெளியே விஷ்ணு பாதம் இருக்கின்றது. அதற்கு கங்கை நீரை அபிஷேகம் செய்து, மலர்களைத் தூவி மக்கள் வழிபடுகின்றனர்.

டுண்டி கணபதி

‘டுண்டி’ கணபதி காசியின் முக்கியமான தெய்வங்களுள் ஒன்று. காசியின் சிறிய சந்துகளில் பல கடைகளுக்கு நடுவே ஒளிந்து கொண்டிருக்கும் இவரை தேடித் தான் கண்டுபிடிக்க வேண்டும். காசிக்குச் செல்பவர்கள் மணிகர்ணிகையில் நீராடிவிட்டு தேவ, ரிஷி, பித்ரு கடன்களை முடித்து விட்டு பின்னர் டுண்டி கணபதியை வணங்க வேண்டும். டுண்டி விநாயகரைக் காலையில் வணங்கினால் ஒருவருடைய அனைத்து இடையூறுகளும் நீங்கி வாழ்க்கையில் வளமுண்டாகும்.  “சகல சித்திகளையும் அளிக்கும் டுண்டி விநாயகரை ஒருவன் அனுதினமும் தொழுது வந்தால் அளவற்ற நன்மைகளை அடைகிறான்” என்கிறது ஸ்காந்த புராணம்.

 

 

தண்டபாணி ஆலயம்

‘தண்டபாணி’ ஆலயம் கால பைரவர் ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ளது. காசியின் தண்டல் நாயகர் இவர் அதனால்தான் இப்பெயர். கால பைரவரின் தளபதியான இவர், காசியில் உள்ள கணங்களுக்கெல்லாம் அதிபதியும் கூட. சலவைக் கல்லால் ஆன ஆலயத்தில் இரு கைகளிலும் ஒரு தண்டத்தைப் பிடித்துக்கொண்டு குத்திட்டு அமர்ந்துள்ளார் தண்டபாணி. கழுத்திலும், தலையைச் சுற்றியும் ருத்திராட்ச மாலைகள் அழகு செய்கின்றன. கால பைரவரின் ஆக்ஞைக்கு உட்பட்டு தண்டனைகளை நிறைவேற்றுபவர் இவர்தான். ‘தண்டுபாணி’என்று சொல்லி வட நாட்டவர்கள் இவரை வழிபடுகின்றனர்.

கால பைரவர்

காசி நகரத்தின் காவல் தெய்வமும், க்ஷேத்திர பாலகரும் ‘கால பைரவர்’தான். இவர் கட்டுப்பாட்டில்தான் காசி மாநகரே உள்ளது. இவர் கண்ணசைவின்றி காசியில் ஏதும் நிகழாது என்பது ஐதீகம். இவரைத் தரிசிக்காமல் காசி யாத்திரை பூர்த்தி ஆவதில்லை. உருண்டையான முகம், பெரிய கண்கள், அடர்ந்த மீசை என கம்பீரமாக இவர் காட்சி தருகிறார். உள்ளே நுழைந்து பைரவரை வணங்கியதும் ஆலயத்தில் உள்ள பண்டா மயிற்பீலியால் நம் முதுகில் தட்டுவார். அதனைத் தொடர்ந்து ‘தண்டம்’ வழங்கப்படுகிறது. தண்டம் என்பது ஒரு நீண்ட கோல். அதைப் பக்தர்களின் தலையில் வைத்து ஆசீர்வதிக்கிறார்கள். கோயில் வாயிலில் ’காசிக்கயிறு’என்னும் கறுப்புக் கயிறு விற்கிறார்கள். காசிக்கு வந்து சென்றதற்கும், கால பைரவரைத் தரிசித்து அவர் அருள் பெற்றதற்கும் அதுவே அடையாளம். அந்தக் கயிறுகளை வாங்கி, அதனை பைரவரின் திருவடியில் வைத்து வணங்கி தாங்களும் கட்டிக் கொள்வதுடன் காசி யாத்திரை நிறைவேறியதும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கு அளிக்கலாம். ஆதிசங்கரர் காசி பைரவர் மீது “கால பைரவாஷ்டகம்.” என்றொரு அற்புதத் துதியை இயற்றியுள்ளார்.

காசி

இங்கே காசி என்று குறிப்பிடுவது ஆதி காசி. இது ஒருசிறு கோயில். இங்கு ஒருசிறிய லிங்கமும், சிவமூர்த்தியும் இருக்கின்றன.

குஹாம்

மிருத்யுயேஞ்சஸ்வரர் ஆலயம் அருகே ஒரு குளம் உள்ளது. இதுதான் ஆதி கங்கை என்று சிலர் கூறுகின்றனர். இதன் அருகே உள்ள குகையே குஹாம் என்று அழைக்கப்படுகிறது.

கங்காம்

இது ஆதிகங்கை இருந்த இடம். இங்குதான் பகீரதன் கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்தான் என்கிறது புராணம். ஆதிகங்கையின் நீரை தலையில் தெளித்துக் கொண்டால்தான் கங்கையில் முழுமையாக நீராடிய பலன் கிடைக்கும்.

பவானி

காசி விசாலாட்சியே பவானி ஆகப் போற்றப்படுகிறாள் என்பதாக ஒரு கருத்து உண்டு. பவானி என்பது காசியில் உள்ள துர்கை அம்மன் ஆலயமே என்றும் சிலர் கருதுகின்றனர். விசாலாட்சி ஆலயம், விஸ்வநாதர் ஆலயத்திற்குப் பின்புறம் சற்றுத் தொலைவில் அமைந்துள்ளது. தனிச் சன்னதியில் அன்னை விசாலாட்சி நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியிருக்கிறாள். வெள்ளிக் கவசத்தில், சாந்தமான திருமுகத்துடன், கருணை பொங்கும் திருவிழிகளுடன் அன்னை காட்சி தருகிறாள். இவ்வாலயம் அன்னையின் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அன்னையின் பின்புறம் உற்றுக் கவனித்தால் மற்றொரு திருவுருவத்தைக் காண இயலும். அதுவே ‘பவானி’ என்று சிலர் கூறுகின்றனர். காசி நகரத்தாரின் பொறுப்பில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

மணிகர்ணிகா

மணிகர்ணிகா தீர்த்தம் மிகப் புனிதமானது. காசித் திருத்தலத்தின் மிக முக்கியமான படித்துறை இது. இங்குள்ள மயானம் மிகப் புனிதமானதாகப் போற்றப்படுகின்றது. இங்கு தகனம் செய்வது மோட்சத்தைத் தரும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.  உடல்கள் வண்டியில் கொண்டுவரப்பட்டு, மணி கர்ணிகையில் நீராட்டப்பட்டு பின்னர் தகனம் செய்யப்படுகின்றது. இங்கு நீராடி நீத்தார் கடன்களைச் செய்வதன் மூலம் முன்னோர்கள் மேலுலகம் செல்வதாக நம்பிக்கை. இங்கு நீராடி மணிகர்ணிகேஸ்வரரை தரிசித்த பின்தான் காசியின் பிற தெய்வங்களை வணங்கச் செல்ல வேண்டும் என்ற நியதி உள்ளது. இங்குள்ள இறைவன் மணிகர்ணேஸ்வரர் என்று போற்றப்படுகிறார். காசியில் மரிப்போரின் காதுகளில் ஈசன் குனிந்து ராம நாமத்தை ஓதும் போது அவர் காதுகளில் அணிந்துள்ள குண்டங்கள் தரையில் படுவதால் இறைவனுக்கு இப்பெயர். (மணி – குண்டலம்; கர்ணிகா – காது). “மணிகர்ணிகையில் குளித்து மணிகர்ணிகேஸ்வரரைத் தியானிப்பவர்களுக்கு மீண்டும் பிறவி இல்லை. மணிகர்ணிகையில் ஒருமுறை மூழ்கி எழுந்தால் அது அனைத்துப் புண்ணிய நதிகளிலும் நீராடிய பலனைத் தரும். மணிகர்ணிகைக்குச் சமமான தீர்த்தம் எந்த லோகத்திலும் இல்லை” என்கிறது ஸ்காந்த புராணம்.

அன்னபூரணி

காசியின் அதி முக்கிய தெய்வங்களுள் ஒன்று அன்னபூரணி. காசி முழுக்க முழுக்க அன்னையின் அருளாட்சிதான்.

‘நித்யானந்தகரீ வர அபயகரீ ஸௌந்தர்ய ரத்னாகரீ|

நிர்தூதாகில கோர பாபநகரீ ப்ரத்யக்ஷ மாஹேஸ்வரீ|

ப்ராலேய அசலவம்ச பாவனகரீ காசீ புராதீச்வரீ|

பிக்ஷாம் தேஹி க்ருபாவலம் பநகரீ மாதான்னபூர்ணேச்வரீ’

என்று அன்னபூர்ணாஷ்டகத்தில் ஸ்ரீ அன்னையிடம் வேண்டுகிறார் ஆதிசங்கரர். விஸ்வநாதர் ஆலயத்தில் தனிச்சன்னதியில் அன்னை எழுந்தருளியுள்ளாள். அன்னையை சிறிய ஜன்னலின் வழியாக மட்டுமே தரிசிக்க இயலும். அன்னை இடக்கரத்தில் தங்கக் கிண்ணமும், வலக்கரத்தில் தங்கக் கரண்டியும் ஏந்தி பிக்ஷாண்டாவருக்கு அன்னம் அளிக்கும் கோலத்தில் காட்சி தருகிறாள். அன்னையின் இருபுறமும் ஸ்ரீ தேவியும், பூதேவியும் வீற்றிருக்கின்றனர். தங்க. அன்னபூரணியை தீபாவளியன்று முழுமையாகத் தரிசிக்கலாம். அன்று அன்னையைத் தரிசிப்பது வெகு விசேஷமானதாகக் கருதப்படுகின்றது.

கங்கா ஆரத்தி

காசிக்குச் செல்பவர்கள் தவற விடக்கூடாத ஒன்று கங்கா ஆரத்தி. தசாஸ்வமேத காட்டில் தினசரி நடக்கும் நிகழ்வு இது. மாலை சுமார் 6.30க்கு ஆரம்பித்து 7.30க்கு முடியும். இளம் வயதுள்ள ஏழு ஆண்கள் கங்கை நதிக்குச் செய்யும் பூஜையே ‘கங்கா ஆரத்தி’ எனப்படுகிறது. முதலில் புனிதமான சங்கை ஊதி, மணியை அடித்து பூஜையை ஆரம்பிக்கின்றனர். அடுத்தடுத்து ஊதுபத்தி, சாம்பிராணி, மலர்கள் என ஒவ்வொன்றின் மூலமும் ஆரத்தி நடைபெறுகிறது. பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாக இது இருக்கும்.

இவை தவிர காசியில் தரிசிக்க வேண்டிய ஆலயங்கள் பல இருக்கின்றன.  கேதாரேஸ்வரர் ஆலயம், ஹனுமான்காட் ஆஞ்சநேயர், துர்கா மந்திர், வராகி அம்மன் கோவில், துளசி மானஸ் மந்திர், சங்கட் மோசன் ஹனுமான் ஆலயம் போன்றவை இவற்றில் குறிப்பிடத்தகுந்தவை.

எல்லா ஆலய தரிசனங்களையும் முடித்து விட்டு இறுதியில் கௌடி மாதா என்னும் சோழி அம்மன் கோவிலை அவசியம் தரிசிக்க வேண்டும். ‘காசீ பல் ஹம் கோ; கௌடீ பல் தும்கோ’ என்று சொல்லி சோழிகளைக் கையால் அளைந்து இங்கே வழிபட வேண்டும் என்பது ஐதீகம். படி ஏறிச் சென்றுதான் இவளைத் தரிசிக்க வேண்டும். இந்த அம்மன் முன் வைக்கப்பட்டிருக்கும் சோழிகளைக் கையால் அளைந்து இவளை வணங்கி விடை பெற்றால்தான் காசி யாத்திரை  காசியில் பூர்த்தி ஆவதாக ஐதீகம்.

கங்கை நீரைக் கொண்டு வந்து, இராமேஸ்வரத்தில் உள்ள ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதுடன்தான் காசி யாத்திரை என்பது முழுமையாகப் பூர்த்தி ஆகிறது.

உண்மையில் காசி யாத்திரை என்பது வெறும் யாத்திரை மட்டுமல்ல; அது, ஹிந்துக்கள் தங்களது பண்பாட்டை, கலாசாரத்தை, வேற்றுமையில் ஒற்றுமை காணும் ஒருமை உணர்வை ஒருங்கிணைக்கும் ஒரு புனிதப் பயணம். ஹிந்துக்கள் ஒவ்வொருவரும் தம் வாழ்வில் ஒருமுறையாவது மேற்கொள்ள வேண்டிய யாத்திரை காசி யாத்திரை எனலாம்.

காசிக்குச் செல்வோம்; கவலைகளைக் களைவோம். ஓம்

RAMANAN WRITER-பா.சு.ரமணன்
(Visited 1,371 times, 1 visits today)
Marquee Powered By Know How Media.
Loading...