உணவே மருந்து, மருந்தே உணவு

FOOD

பிரபஞ்சத்தில் உள்ள உயிரினங்களின் இயக்கத்திற்கு அடிப்படையானது உணவு. உட்கொள்ளப்படும் உணவானது குடலில் செரித்து அதிலுள்ள சத்துக்கள் உறிஞ்சப்பட்டு உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு ஆதாரமாக விளங்குகிறது. இன்றுவரை உலக உயிரினங்கள் உணவுக்காகவே தமது நாளின் பெரும் பகுதியைச் செலவிடுகின்றன. மனிதர்களுக்கிடையிலான மோதல் தொடக்க காலத்தில் உணவுக்காகவே ஏற்பட்டிருக்க வேண்டும்.

உணவு என்பது இன்று அலங்கரமான பொருளாக மாறிவிட்டது. வெவ்வேறு நாட்டின் உணவு வகைகளுக்கும் விதவிதமான சமையல் வகைகளுக்கும் நமது நாக்கு அடிமையாகி விட்டது.

உணவு, பசிக்காக மட்டுமல்ல; ஆரோக்கியமான எண்ணம், ஆரோக்கியமான உடல் ஆகியவற்றைப் பெறுவதற்காகவும்தான். அப்படிப்பட்ட உணவு, கலப்படமில்லாததாக, இரசாயனப் பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தப்படாததாக, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

நாம் உண்ணும் உணவு, நம் கலாச்சாரத்திற்கும் நம் மரபணுவிற்கும் ஏற்றவாறு அமைந்திருக்க வேண்டும்.இப்படிப்பட்ட உணவே நல்ல சிந்தனையையும் செயலையும் கொடுக்கும்.

ஆனால் இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. நம்மில் பலர் உணவில் கவனம் செலுத்துவதே இல்லை. “பசித்துப் புசி” என்ற முதுமொழி பறந்துபோய்விட்டது. நேரம் பார்த்து உண்ணும் நிலை உருவாகிவிட்டது. அதோடு கண்ட நேரத்தில் உண்ணவும் பழகிவிட்டோம்.

கடைகளில் விற்கப்படும் “பாஸ்ட் ஃபுட்” வகைகளை நாம் நம் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுப்பதால் அவர்களின்  செயல்பாடுகள் முரட்டுத்தனமாகவும், மந்தமாகவும் அமைய நாமே காரணமாகிறோம். இதனால் அவர்களால் சரிவரப் படிக்க முடிவதில்லை. சீக்கிரம் களைப்படைந்தும் விடுகிறார்கள். இது நம் தவறே அன்றி குழந்தைகளின் குற்றம் அல்ல. இந்த நிலை மாறி நம் முன்னோர்கள் உட்கொண்ட ஆரோக்கியமான, சத்தான உணவுகளையே நாமும் உட்கொள்ள முன்வர வேண்டும்.

முன்பெல்லாம் கேப்பைக் களி, வரகரிசிச் சோறு, கம்பு தோசை , தேன் கலந்த தினைமாவு போன்ற சிறு தானியங்கள்தான் பெருவாரியான  நம்மக்களின் உணவாக இருந்தது. வரகு, சாமை, கம்பு, சோளம்,தினை, குதிரைவாலி போன்ற தானியங்களைச் சமைத்து உண்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். கொழுப்புச் சத்து குறையும். உடலுக்கு நல்ல ஊட்டச் சத்து கிடைக்கும். உடல் பருமன் ஏற்பட்டாமல் பாதுகாக்கும். மேலும் இத்தானியங்கள் அதிக நார்ச்சத்து கொண்டிருப்பதால் மலச்சிக்கல் போன்றவை ஏற்படாது. எளிதில் ஜீரணமடைகிறது. இவற்றில் குறைந்த அளவே குளுக்கோஸ் இருப்பதால் சர்க்கரை நோய்க்கும் வாய்ப்பு இல்லை. உடலும் தேக்கு மரம் போல் வலுவாக இருக்கும்.

இன்று இவையெல்லாம் காணாமல் போய்விட்டது. அரிசியே கதி என்றாகிவிட்டது. அதையும் நாம் பாலிஷ் செய்து தவிடு நீக்கி வெறும் சக்கையைத்தான் சாப்பிடுகிறோம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உடல் பலவீனமடைகிறது.

நவீன அறிவியலின் துணைக் கொண்டு நமது பாராம்பரியத்திற்கு திரும்ப வேண்டும். அந்த கால உணவு வகைகளை சமைக்க நாம் முயற்சி செய்ய வேண்டும். கால்போன போக்கில் போகாமல், நன்கு ஆராய்ந்து நம் தாத்தா, பாட்டி நமக்கு வழங்கிச் சென்றுள்ள உணவு வகைகளை மீண்டும் உட்கொள்ள ஆரம்பித்தால், நாம் அனைவரும் உடல், மன ஆரோக்கியத்தைப் பெற்று சுகமாக வாழ முடியும்.

நா. நாச்சாள்
(Visited 3,059 times, 4 visits today)
Marquee Powered By Know How Media.
Loading...