வேதத்தின் கண்

KANCHI MAHAN FIVE

ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமிகள்

நம்முடைய வைதிக மதத்திற்கு ஆதாரமாகிய பதினான்கு வித்யாஸ்தானங்களுள் ஷடங்கங்களில் சிக்ஷை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம் ஆகியவற்றிற்கு அடுத்ததாக வருவது ஜ்யோதிஷம் ( சோதிடம் ) என்பது.

வேதபுருஷனுக்கு ஜ்யோதிஷம் நேத்திர ஸ்தானம், அதாவது கண்.

ஜ்யோதிஷ சாஸ்திரமானது மூன்று ஸ்கந்தங்கள் அடங்கியது. அதனால், அதற்கு ‘ஸ்கந்த த்ரயாத்மகம்’ என்று பெயர்.

ஜ்யோதிஷத்தை ஏன் வேத புருஷனுக்குக் கண்ணாகச் சொல்லியிருக்கிறது?

 

கண் இல்லாதவன் குருடன். கண் எதற்காக இருக்கிறது? பக்கத்திலுள்ள வஸ்துக்களைக் கையினால் தடவிப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். தூரத்திலுள்ளதன் ரூபம் தெரிய வேண்டுமானால், அப்பொழுது கண்ணினால் பார்த்தே தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இடத்திலே தூரத்தில் இருப்பதைத் தெரிந்துகொள்ள நம்முடைய கண் எப்படி உபயோகப்படுகிறதோ, அப்படிக் காலத்திலே தூரத்தில் ( அதாவது பல வருஷங்களுக்கு முன்னால் அல்லது பல வருஷங்களுக்கு அப்பால் ) உள்ள க்ரஹ நிலைகளைத் தெரிந்து கொள்ள ஜ்யோதிஷ சாஸ்திரம்தான் உதவி புரிகிறது.

இன்றைக்கு சூரியனும் சந்திரனும் மற்ற க்ரஹங்களும் எங்கே இருக்கின்றன என்பதைப் பிரத்யக்ஷத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். கண்ணில்லாவிட்டாலும் கையால் தடவியே கிட்டத்தில் உள்ளதன் ரூபத்தைத் தெரிந்து கொள்வதுபோல், ஜ்யோதிஷ சாஸ்திரம் தேவைப்படாமல் நம் கண்ணாலேயே பார்த்து, காலத்தில் கிட்டே, அதாவது நிகழ்காலத்தில் உள்ள கிரஹ நிலைமைகளை அறிந்து கொண்டுவிடலாம். ஆனால் 50 வருஷத்துக்கு முன்னால் அல்லது பின்னால் கிரஹங்கள் எங்கே இருக்கும் என்று தெரிய வேண்டுமானால் ஜ்யோதிஷ சாஸ்திரத்தைப் பார்த்தாலே தெரியும்!

கிட்டத்தில் உள்ளதைத் தடவிப் பார்த்து, அதன் உருவத்தை அறிகிறபோதுகூட அது பச்சையா, சிவப்பா,வேறு என்ன கலர் என்று தெரிந்து கொள்ள முடிவில்லை. இதை அறியக் கண் வேண்டியிருக்கிறது. இதே போல, பிரத்யக்ஷத்தில் ஒரு கிரஹம் தெரிந்தால்கூட, அது அந்த நிலையில் இருப்பதால் ஏற்படுகிற பயன் என்ன, அது நம்மை எப்படி பாதிக்கிறது என்று நமக்குத் தெரியாது. இதை ஜ்யோதிஷந்தான் நமக்குத் தெரிவிக்கிறது.

ஆகவேதான், ஜ்யோதிஷத்தை வேத புருனுக்குக் கண் என்றார்கள். வைதிக காரியங்களைச் செய்வதற்கு, இன்னின்ன கிரஹம் இன்னின்ன இடத்தில் இருக்க வேண்டும் என்ற விதி உண்டு. ‘நாள் பார்ப்பது’, ‘முஹூர்த்தம் வைப்பது’ என்றெல்லாம் க்ரஹ நிலைகளை ஒட்டித்தானே சடங்குகளைப் பண்ண வேண்டியிருக்கிறது? இதனால் ஜ்யோதிஷம் நேத்ர ஸ்தானத்தைப் பெறுகிறது.

Astrology

ஜ்யோதிஷத்துக்கு ‘நயனம்’ என்று ஒரு பெயர் உண்டு. ‘நய’ என்றால் அழைத்துக் கொண்டு போவது ( to lead ). கண்ணில்லாதவனை இன்னொருவர்தானே அழைத்துக் கொண்டு போக வேண்டியிருக்கிறது? அதனால் கண்தான் அழைத்துப் போகிற லீடராக இருக்கிறது என்பது தெரிகிறது! வேதகர்மாக்களைப் பண்ணுவதற்கான காலத்தை நிர்ணயம் பண்ணி, நம்மை அந்தக் காரியத்துக்கு அழைத்துக் கொண்டு போகிற கண்ணாக இருப்பது ஜ்யோதிஷம்.

வான சாஸ்திரம் ( Astronomy ) என்பதாக கிரஹங்களின் நிலைமைகளை மட்டும் ஆராய்ச்சி பண்ணுவதோடு இன்றைய ஸயன்ஸ் நின்றுவிடுகிறது. அவை அந்த நிலைகளில் இருப்பது லோகத்தை எப்படிப் பாதிக்கிறது, நம்மை எப்படிப் பாதிக்கிறது, அவற்றை நமக்கு அநுகூலமாக்கிக் கொள்ள என் பண்ண வேண்டும் என்ற விஷயங்களை – அதாவது, “ஜோஸ்யம் பார்ப்பது” என்று நாம் சொல்கிற Astrology சமாச்சாரங்களையும் Astronomy யோடு சேர்த்துச் சொல்வது ஜ்யோதிஷ சாஸ்திரம்.

கிரஹங்கள், நக்ஷத்ரங்கள், திதி ஆகியன இப்படியிப்படி இருந்தால், அந்த சமயத்தில் செய்யும் கர்மாக்களுக்கு இப்படியாகப்பட்ட பலன்கள் உண்டாகின்றன என்பதைச் சொல்லவே ஜ்யோதிஷ சாஸ்திரம் ஏற்பட்டது. வைதிக கர்மாக்களைச் செய்வதற்குரிய அநுகூலமான காலங்களை நிர்ணயிப்பதற்காகவே வேதாங்கமான ஜ்யோதிஷம் ஏற்பட்டது.

பிரபஞ்சத்தில் நவக்ரஹங்களின் ஸ்திதிகளைப் போலவே மனிதர்களுடைய ஸ்திதியும் மாறிக் கொண்டே வருகிறது. கஷ்டம், ஸெளக்கியம், துக்கம், ஸந்தோஷம், உன்னத பதவி, தாழ்ந்த பதவி என்று இப்படி மாறிக் கொண்டே இருப்பவன் மனிதன் மட்டும் அல்லன். ஸ்தாபனங்களுக்கும் அப்படியே, தேசங்களுக்கும் உயர்ந்த காலம், தாழ்ந்த காலம் என்று வருகிறது.

லோகத்தில் நடக்கும் ஸூகதுக்கங்களுக்கும் கிரஹங்களுககும் ஸம்பந்தம் உண்டென்று கண்டு மஹரிஷிகள் இன்ன இன்ன மாதிரி கிரஹங்கள் இருந்தால் இன்ன இன்ன பலன் கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஒரு காரியம் ஆரம்பித்தால், அதன் ஆரம்பகால கிரஹரீதிகளைக் கொண்டு, மேலே நடக்கும் ஸூகதுக்கப் பலன்களைச் சொல்லும் பாகத்திற்கு “ஹோரா ஸ்கந்தம்” என்று பெயர். ஜனன காலத்தை ஆரம்பமாக வைத்துக் கொண்டு ஜாதகம் கணித்து வாழ்நாள் முழுவதற்கும் சுகதுக்க பலன்களைச் சொல்லிவிடலாம்.

(Visited 71 times, 1 visits today)
Marquee Powered By Know How Media.
Loading...