நாட்டு-தொழில்-வாழ்க்கைப் பாடல்கள்

Kanchi Mahan

ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்

நாட்டுப் பாடல்கள் என்று ஒரு பிரிவு.இப்படியே நாட்டு மக்களுக்கு என்று கூத்தும், பலவிதமான நடனங்களும்  இருக்கின்றன – கரகம், காவடி ஆட்டம், பொய்க்கால் குதிரை. எதுவானாலும் ஈச்வர சம்பந்தம் எப்படியாவது வந்து சேர்ந்துவிடும். தெம்மாங்கு, காவடிச் சிந்து, நொண்டிச் சிந்து முதலானவை நாட்டுப்பாடல் வகைகள். உழுகிறவன், ஏற்றம் இறைக்கிறவன், படகு ஒட்டுகிறவன், பாரம் இழுக்கிறவன், தயிர் சிலுப்புகிறவள், நெல்லு குத்துகிறவள் எல்லாருமே பாடிக்கொண்டே தொழில் பண்ணுகிறார்கள்.

வேலையின் பளு நெரிக்கமால் வேலையை மனசுக்குப் பிடித்த மாதிரி மாற்றித் தருகிற மருந்தாகப் பாட்டு இருக்கிறது. பல பேர் பாடி, ஆடிக் கொண்டு வேலை செய்கிறபோது ஜாஸ்தி வேலையும் நடக்கிறது. இந்தப் பாட்டுகளிலும் கொஞ்சமாவது தெய்வ ஸம்பந்தம் தொட்டுக்கொல்லாமலிராது.மனசுக்கு உத்ஸாஹத்தைக் கொடுத்து அதனாலேயே சிரமமான சரீர உழைப்பையும் சுலபமாக்கித் தருகிற ஆற்றல் இசைக்கு இருப்பது போலவே, எந்த உணர்ச்சியானாலும் அதை நன்றாகக் கிளறிவிட்டு நம் மனசை விட்டுக் கொட்டும்படிப் பண்ணி, இதனால், அப்புறம் சாந்தியை உண்டாக்கும் ஆற்றலும் அதற்கு இருக்கிறது.

FOLK SONG

சந்தோஷம், துக்கம், வீரம் என்று எந்த உணர்ச்சியானாலும் பாட்டில் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால், முடிவாக சாந்தத்தில் சேர்க்கவே ஸங்கீதம். பரம ஸெளக்கியத்தை ஸங்கீதத்தின் மூலம் அடைவதற்கே வழிகாட்டிய தியாகையர்வாள் ‘சாந்தமுலேக ஸெளக்யமுலேது’ என்று பாடினதால் சாந்தம்தான் சங்கீதத்தின் நிறைவான குறிக்கோள் என்று தெரிகிறது. ஈச்வர ஸ்மரணம்தான் அப்படிப்பட்ட நித்யமான சாந்தத்தைக் கொடுக்க வல்லதாகையால் சங்கீதம் பரமாத்மாவை மையமாகக் கொண்டதாவே நம்முடைய உயர்ந்த சம்பிரதாயத்தில் நெடுங்காலமாக வந்திருக்கிறது.

(Visited 87 times, 1 visits today)
Marquee Powered By Know How Media.
Loading...