பக்தியோடு தமிழ் வளர்ந்த காலம்

K C Lakshmi Narayananகே.சி. லட்சுமிநாராயணன்

சங்க கால நூல்கள்:

இன்று நமக்குக் கிடைத்துள்ள தமிழ் நூல்களில் மிகவும் பழமையான நூல் தொல்காப்பியம். எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று இலக்கணங்களையும் கூறும் நூல்; தமிழக மக்களின் வாழ்க்கையையும், நாகரிகத்தையும் சுட்டிக் காட்டும் நூல்; தொல்காப்பியம் பண்டைய காலம் குறித்த பல செய்திகளைத் தெரிவிக்கிறது.

எட்டுத் தொகையும், பத்துப்பாட்டும் சங்க காலத்தில் எழுந்த இலக்கியங்கள்.

நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறு நூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய எட்டு நூல்களும் எட்டுத்தொகை என்ற பிரிவில் அமைபவை.

திருமுருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல் வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் பத்துப்பாட்டு என்ற பிரிவில் உள்ளவை.

பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் மட்டுமே சங்ககால நூல்கள். இவை பதினெண் மேல்கணக்கு நூல்கள் என்றும் சொல்லப்படுகின்றன. கி.மு. 500வது ஆண்டு முதல் கி.பி. 100வது ஆண்டு வரையிலான காலம் சங்க காலம் என்பது அறிஞர்களின் கருத்து.

சங்கம் மருவிய காலம்:

நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்தினை ஐம்பது, ஐந்தினை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்ச மூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகிய பதினெட்டு நூல்கள் சங்கம் மருவிய காலத்தில் எழுந்தவை. இவற்றைப் பதினெண் கீழ்கணக்கு நூல்கள் என்பவர்.

கி.பி. 100வது ஆண்டு முதல் கி.பி. 600வது ஆண்டு வரையிலான காலம் இந்த நூல்கள் படைக்கப்பட்ட சங்கம் மருவிய காலம் என்பர்.

இதே காலத்தில் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்கள் படைக்கப்பெற்றன.காரைக்கால் அம்மையாரும், திருமூலரும் இதே காலத்தில்தான் வாழ்ந்து சமய இலக்கியங்களைப் படைத்தார்கள். சங்கம் மருவிய காலத்தின் ஒரு பகுதி இருண்ட காலம் என்று வரலாற்று ஆசிரியர்களால் குறிக்கப்படுகிறது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் தமிழகம் களப்பிரர்கள் என்ற அயலார் ஆட்சிக்கு உட்பட்டது. அவர்களது தாய்மொழி தமிழ்மொழி அன்று. அவர்கள் பாலி மொழியை ஆதரித்தார்கள். அக்காலத்தில் ஆதரிப்போர் இன்றித் தமிழ் மொழி தாழ்நிலையை அடைந்தது. அந்த இருண்ட காலத்திலும் சில நல்ல தமிழ் நூல்கள் இயற்றப்பட்டன.

பக்தி இயக்கக் காலம்:

சமயாசாரியர்கள் தலைமையில் பக்தி இயக்கக் காலம் தொடங்கியது. தமிழகத்தைச் சூழ்ந்து நின்ற இருள் அகன்றது; பண்பாட்டுச் சிதைவு தடுத்து நிறுத்தப்பட்டது; தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் தரப்பெற்றது; மக்களிடையே சமயம், சமுதாயம் ஆகிய துறைகளில் மாபெரும் மறுமலர்ச்சி ஏற்பட்டது; சத்தியமும், தர்மமும் மீண்டும் பொலிவு பெற்றன.

திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய தமிழகத்தின் நான்கு சைவ சமயாசாரியர்களும், பிற சைவ அருளாளர்களும் அருளிய திருப்பதிகங்கள் பன்னிரு சைவத் திருமுறைகளாக தொகுக்கப் பெற்றன.

திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார், திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார், மெய்கண்ட தேவர், அருள் நந்தி சிவாசாரியர், திருவதிகை மனவாசகம் கடந்தார், உமாபதி சிவாசாரியார் ஆகிய அருளாசிரியர்கள் அருளிய பதினான்கு வை சித்தாந்த சாத்திரங்கள் எழில் மிகுந்த இனிய தமிழில் எழுந்தன. இவை மெய்கண்ட சாத்திரங்கள் என்றும் விளங்குகின்றன.

பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகராழ்வார், திருமழிசையாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், மதுரகவியாழ்வார், திருமங்கை யாழ்வார், நம்மாழ்வார், முதலாழ்வார்கள் என்ற தனிச் சிறப்பிற்குரிய பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய பன்னிரு ஆழ்வார்கள் அருளிய பிரபந்தங்கள் அடங்கிய நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் எழுந்தது.

பன்னிரு சைவத் திருமுறைகளும், பதினான்கு சைவ சித்தாந்த சாத்திரங்களும், நாலாயிரத் திவ்யப் பிரபந்தமும் தமிழ் இலக்கியத்திற்கு மணிமகுடமாகத் திகழ்கின்றன.

சமய நூல்கள் படைப்பு தொடர்ந்து நிகழ்ந்தது. கம்பன் வழங்கிய இராமாயணம் தலைசிறந்த காப்பியம்; உலக மகா காப்பியங்களில் முன் வரிசையில் முதலிடம் பெறும் தகுதியும் கீர்த்தியும் உடையது.

பட்டினத்துப் பிள்ளையார், அருணகிரிநாதர், தாயுமானவர், குமரகுருபரர் முதலிய பிற அருளாளர்களும், சிந்தனைக்கு விருந்தாக அமையும் சமய நூல்களை வழங்கியிருக்கிறார்கள்.

தமிழ் மொழியில் சங்க கால நூல்களும், சங்கம் மருவிய கால நூல்களும், பக்தி இயக்கக் காலத்திலிருந்து படைக்கப்பட்டுள்ள சமய நூல்களும், பாரதப் பண்பாடு குறித்த விரி உரைகளாகவே விளங்குகின்றன.

(Visited 260 times, 1 visits today)
Marquee Powered By Know How Media.
Loading...