வீர்யம் நிறைந்த சித்த வைத்தியம்

Kanchi Periyavar

ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமிகள்

ஆயுர்வேதத்தைப் போலவே, ஸித்த வைத்யமும் நம் சாஸ்திர ரீதியானதுதான். ஆனால், வீர்யம் ஜாஸ்தி. தப்பினால் ரொம்பக் கெடுதல் உண்டாய்விடும். துளிப்போல சூர்ணம்தான் டோஸேஜ் ஆனாலும் Potency ( உள் சக்தி ) மிகவும் அதிகம். அதனால் ஜாக்ரதையாக சிகித்ஸை செய்ய வேண்டும்.

அகஸ்தியர், தேரையர் முதலான ஸித்த புருஷர்கள் நமக்குப் புரியாத பரிபாஷையில் ஸித்த வைத்ய சாஸ்திரங்களைக் கொடுத்திருக்கிறார்கள். ‘பவர்’ ஜாஸ்தி என்பதாலேயே இப்படி எல்லாருக்கும் புரியாதபடி ஜாக்ரதை பண்ணி எழுதி வைத்திருக்கிறார்கள்.

சரீர ரக்ஷைக்கு மூன்றுவழி சொல்வார்கள் – மணி, மந்திரம், ஒளஷதம் என்று. நவரத்தினங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வித வியாதியைப் போக்கும் குணமுண்டு. நவரத்தினங்களில் ஒவ்வொன்றும் நவக்ரஹங்களில் ஒவ்வொன்றுக்குப் பிரீதியானவையாகும். வியாதி என்பது கர்மாவால் ஏற்படுவதே என்றாலும் அந்தக் கர்மா ஒவ்வெரு கிரஹக் கோளாறாக ரூபம் எடுத்து உண்டாகிறது. ஆகையாமல் அதற்கு சாந்தியாக நவரத்தினங்களில் அந்த கிரஹத்துக்குரிய மோதிரமாக, மாலையாகப் பண்ணிப் போட்டுக் கொள்வது, அந்த மணியால் மூர்த்தி பண்ணி அதற்கு அபிஷேகித்த தீர்த்தத்தைப் பானம் பண்ணுவது என்றெல்லாம் ஒரு வழி. இதுதான் ‘மணி, மந்திர, ஒளஷதம்’ என்பதில் ‘மணி’.

நவரத்தினத்தை நவமணி என்றும் சொல்கிறோமல்லவா? மணிகளைப் போலவே ஸ்வர்ணம், ரஜதம் (வெள்ளி), தாம்ரம், பாதரஸம் முதலான லோஹங்களைக் கொண்டும் சிகித்ஸை செய்து கொள்வதுண்டு.

siddha-medicine

மந்த்ர ஜபம், ஜ்வரஹரேச்வரர் கம்பஹரேச்வரர் என்றெல்லாம் வியாதிகளைப் போக்கவே உள்ள மூர்த்திகளுக்குரிய மந்த்ரங்களை ஜபிப்பது, ஸூர்ய நமஸ்காரம், கந்தரநுபூதி பாராயணம் முதலியவற்றால் நோயை குணப்படுத்திக் கொள்வது – ஆகியனதான் ( மணி, மந்த்ரம் என்பதில் ) இரண்டாவதான ‘மந்த்ரம்’.

‘ஒளஷதம்’ என்பது மருந்து மூலம் குணம் செய்து கொள்ளும் மருத்துவ சாஸ்திரம். வைத்தியம் என்பது இதைத்தான். ஓஷதி என்றால் மூலிகை. அதன் அடியாகப் பிறந்த சொல்தான் ஒளஷதம். முக்கியமாக மூலிகைகளை அதாவது பச்சிலைகளைக் கொண்டே மருந்துகளைச் செய்வதுதான் ஆயுர்வேதம். பவள பஸ்மம்,முத்து பஸ்மம், தங்க பஸ்மம் ( பஸ்பம் என்றே பொதுவில் சொல்கிறார்கள் ) என்பது போல மணி, லோஹங்களை எப்போதாவது பிரயோஜனப்படுத்தினாலும் ஆயுர்வேதத்தில் முக்யமான மூலச்சரக்கு மூலிகைகள்தான்.

ஸித்த வைத்தியத்தில்தான் மணி, லோஹம், பாஷாணம், மற்ற தாதுப் பொருட்களைக் கொண்ட மருந்துகள் ஜாஸ்தி. ஸித்த வைத்தியம், ஆயுர்வேதம் இரண்டிலுமே மணி ஸம்பந்தத்தையும் சேர்த்து மருந்தை மேலும் effective – ஆகப் பண்ணுவதுண்டு. நல்ல ஸம்பிரதாயத்திலே வந்த வைத்தியர்கள் அநேக மந்த்ரங்களை ஜபித்தபடியே ஒளஷதங்களைப் பண்ணி ஜபித்துத் தருவார்கள். த்ரயம்பக மந்த்ரம், அச்யுத – கோவிந்த என்ற நாமத்ரயம்( மூன்று திருநாமங்கள் ), தன்வந்தரி, அச்வினி தேவர்கள், ஸூர்யன் முதலான மூர்த்திகளுக்கான மந்திரம், கவசம் முதலியவற்றை மருந்தோடு சேர்த்துக் கொள்வதுண்டு. அகஸ்தியர் ஸ்ரீராமசந்திர மூர்த்திக்கு உபதேசித்த ‘ஆதித்ய ஹ்ருதயம்’ பிரஸித்தயாயிருக்கிறது. விஷக் கடிகளுக்கு என்ன மூலிகை, சிந்தூரம் ( ஸித்த வைத்ய சூர்ணத்தை சிந்தூரம்,செந்தூரம் என்று சொல்வார்கள் ) கொடுத்தாலும் மந்திர ஜபம்தான் முக்யமாயிருக்கிறது.
வேத சாஸ்திரங்களுக்கு ஒத்துப் போவதாகவே நம்முடைய வைத்ய சாஸ்திரம் இருக்க வேண்டுமென்பது முக்யம். உடம்பைக் காப்பாற்றிக் கொள்வது முக்யம் என்பதற்காக வேத சாஸ்திர விருத்தமாக ( விரோதமாகப் ) போகக் கூடாது. ஏனென்றால், இப்படி விருத்தமாகப் போனால் அதுதான் நாஸ்திகம்.

(Visited 261 times, 1 visits today)
Marquee Powered By Know How Media.
Loading...