ஆதிரையும் ஆடல் வல்லானும்

-பி.என். பரசுராமன்

 

திருவாதிரை! இச்சொல்லைக் கே

ட்டதும், ஆருத்ரா தரிசனமும் திருவாதிரைக் களியும் சிதம்பரமும் நினைவில் நிழலாடும்.

ஆருத்ரா – என்ற சொல்லுக்கு, நனைந்த – காயாத – புதிய – மிருதுவான – கருணை நிறைந்த என பல பொருள்கள் உண்டு. ஆருத்ரா தரிசனம் என்றால், தயையும், கருணையும் நிறைந்த தரிசனம் என்பது பொருள்.

சிதம்பரத்தில் விசேஷம் ஏன்?

மார்கழித் திருவாதிரையன்றுதான் பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாதருக்கும் சிவபெருமான் நடனக் காட்சி அருளினார். அதையே ஆருத்ரா தரிசனம் என்கிறோம்.

கோயில் என்றால் சைவத்தில் அது சிதம்பரத்தையும், வைணவத்தில் திருவரங்கத்தையும் குறிக்கும்.

சிதம்பரம் நடராஜர் கோயிலின் சித்சபையின் மேலே உள்ள 9 கலசங்கள் நவ சக்திகளையும், அதிலுள்ள 64 கைமரங்கள் 64 கலைகளையும், மேலே வேயப்பட்ட 21,600 ஓடுகள் மனிதன் ஒவ்வொரு நாளும் விடும் மூச்சுக்காற்றினையும், அந்த ஓடுகளைக் கைமரத்தில் இணைக்கும் 72,000 ஆணிகள், மனிதனுடைய நாடிகளையும் குறிக்கும்.

நம் உள்ளத்தில் உள்ள இறைவனே, இங்கு இருக்கிறார் என்பதைக் குறிக்கும் விதமாக இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது.

தான் ஆடுவதன் மூலம் அனைத்தையும் ஆட்டி வைக்கும் நடராஜப் பெருமானும் அன்னை சிவகாமியும் ஆயிரம் தூண்களுடன் கூடிய ராஜ சபையில் ஆண்டிற்கு இருமுறை ( ஆனி, மார்கழி ) எழுந்தருள, அவர்களுக்கு இங்கே அபிஷேகம் நடைபெறும்.

நமக்கு ஓர் ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள். அந்த முறைப்படி ஆனிமாதம் என்பது தேவர்களின் மாலைப் பொழுது, மார்கழி என்பது விடியற்காலைப் பொழுது. ஆகவே, தேவர்களின் விடியற்காலை வேளையான மார்கழியில் நடைபெறும் இந்த வைபவம், அதிகாலையில் நாம் ஆண்டவனை வழிபட்டு நலம் பெற வேண்டியதை உணர்த்தும்.

இவ்வாறு இருந்தால், களி ( மகிழ்ச்சி )தான். இதை நமக்கு உணர்த்துவதே திருவாதிரைக் களி. திருவாதிரை அன்று களி செய்து உண்பது எனும் ஒரு வழக்கமுள்ளது.

‘திருவாதிரைக்களி ஒரு வாய்க்களி’ என்பார்கள். இதற்கு, திருவாதிரையன்று ஒருவாய் களியாவது உண்ண வேண்டுமென்று சொல்லவும் செய்வோம். ஆனால், அது உண்மை அல்ல.

களி வரலாறு

சேந்தனார் என்பவர் சிதம்பரத்திற்கு அருகே வாழ்ந்தவர். இவர், நாள்தோறும் காட்டிற்குள் சென்று விறகுகளை வெட்டி – விற்று வாழ்ந்து வந்தார். ஏழ்மை நிலையிலும் தினந்தோறும் ஒரு சிவனடியாருக்காவது உணவளித்து விட்டுத்தான் உண்பார்.

ஒருநாள் நல்ல அடைமழை. அன்று கிடைத்த சொற்ப வருமானத்தைக் கொண்டு கம்பு – கேழ்வரகை வாங்கி, களி கிண்டி வைத்திருந்தார். சேந்தனாரின் பக்தியை வெளிப்படுத்த எண்ணிய பெருமான், தானே ஒரு சிவனடியாராக சேந்தனாரின் இல்லத்தை அடைந்தார்.

சேந்தனாரும் அடியார் வடிவில் வந்த ஆண்டவனுக்குக் களியைப் படைத்தார். களியை உண்ட இறைவன், அதில் சிறிதளவை எடுத்துப் போனார். மறுநாள் சிதம்பரம் ஆலயத்தில் ஆங்காங்கே களி சிதறிக்கிடந்தது. தீட்சிதர்கள் வியக்க, “நம் தீவிர பக்தனான சேந்தன் தந்த களி இது. அவனுடைய பக்தியை வெளிப்படுத்தவே யாம் இவ்வாறு செய்தோம்” என நடராஜப் பெருமான் அசரீரியாகக் கூறினார்.

சேந்தனாரின் தூய்மையான பக்தியை இறைவனே வெளிப்படுத்தியதைக் கேட்டு அனைவரும் வியந்தார்கள். இந்நிகழ்ச்சி நடைபெற்ற நாள் திருவாதிரைத் திருநாள்.

இதை முன்னிட்டே, மார்கழித் திருவாதிரை அன்று களி படைத்து உண்கிறோம். திருவாதிரைக் களி ஒருவாக் களி – என்று சொல்லவும் செய்கிறோம். இதற்கு, திருவாதிரையன்று ஒரு வாயாவது களி உண்ண வேண்டும் என்பது அர்த்தமல்ல. தமிழில் ஒருவா என்ற சொல்லுக்கு நீங்காத என்பது பொருள். ஆருத்ரா தரிசனம் நீங்காத களிப்பைத் தரும் என்பதையே திருவாதிரைக் களி ஒருவாக் களி என்பது உணர்த்துகிறது.

 

நன்றி – விஜயபாரதம்

(Visited 73 times, 1 visits today)
Marquee Powered By Know How Media.
Loading...