கணபதியின் தத்துவம்

GANAPATI THREE

யானையின் துதிக்கை மரத்தையும் சாய்க்கும் வலிமை கொண்டது. அதுமட்டுமின்றி, தரையில் கிடக்கும். ஊசியைக் கூட யானை தன் துதிக்கையால் எடுத்துவிடும். விநாயகரின் துதிக்கை, விவேகம் மிக்க ஒருவரின் மனம், வலிமை மிகுந்ததாகவும் நுண்ணிய வேறுபாடுகளை உணரும் சக்தியுள்ளதாகவும் இருக்கும் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

விநாயகரின் காதுகள் பெரிதாக இருக்கின்றன. விவேகி, அனைத்தையும் கேட்டுக்கொள்வதை இது உணர்த்துகிறது.

விநாயகருக்கு நான்கு கரங்கள். ஒரு கரத்தில் அவர் தாமரை மலரை ஏந்தியுள்ளார். இது ஞானத்தைக் குறிக்கிறது. மற்றொரு கரத்தில் கதை. எல்லா கர்மங்களையும் அழிப்பவர் விநாயகர் என்பதை இது குறிக்கிறது. மூன்றாவது கரத்தில் கொழுக்கட்டை. விவேகத்துடன் வாழ்வதால் கிடைக்கும் பலன்கள்தாம் கொழுக்கட்டை. விநாயகர் கொழுக்கட்டை வைத்திருக்கிறாரே தவிர, அதை உண்பதில்லை. அதுபோல ஞானியும் பலன்களை அனுபவிக்க விரும்புவதில்லை. அவற்றில் அவனுக்கு பற்றும் இருப்பதில்லை. விநாயகரின் நான்காவது கரம் ஆசி வழங்குகிறது. எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற ஞானியின் விருப்பத்தை இது பிரதிபலிக்கிறது.

விநாயகருக்கு ஒரு தந்தம் மட்டுமே உள்ளது. மற்றொரு தந்தம் உடைந்து காணப்படுகிறது. விநாயகருக்கு யானைத்தலை வந்தது எப்படி, அவரது தந்தங்களில் ஒன்று உடைந்திருப்பது ஏன் என்பதற்கு புராணக் கதைகள் இருக்கின்றன. விநாயகரின் ஒரு தந்தம் உடைந்து காணப்படுவதன் தத்துவம், ஞானி இருமையை கடந்தவன் என்பதைக் குறிப்பதாகும்.

மரணத்தோடு நாம் முடிந்து விடுவதாக நாம் நினைக்கிறோம். எப்போதும் நம்மையே முன்னிலைப்படுத்திக் கொள்கிறோம். மற்ற அனைவரையும், பொருட்களையும் இரண்டாவதாகக் கருதுகிறோம். இந்த இருமை மனதால் உருவாக்கப்படுகிறது. இந்த ஈகோ தான் நாம் இந்த உலகில் வாழ உதவியாக இருக்கிறது. நான் – மற்றது என்ற இருமை, நம் ஆத்மாவை மூடி மறைக்கும் திரையாக இருக்கிறது. இந்த இருமையை கடந்து சென்று விட்டால் பிரபஞ்சமே ஒன்றாகி விடும்.

நாமும் நமது உண்மைத் தன்மையை உணர்ந்து கொள்வோம். விநாயகரின் ஒற்றைக் கொம்பு இந்த ஒருமையைக் காட்டுகிறது. ஞானத்தினால் எல்லாம் ஒன்றே என்பதை எடுத்துக் காட்டுபவராக விநாயகர் காட்சி தருகிறார்.

கணபதி ஒருகாலை தரையில் ஊன்றியும் மற்றொரு காலை மடித்தும் அமர்ந்திருக்கிறார். ஞானியும் இந்த உலகில் வாழ்ந்தாலும், அவர் இந்த உலகத்துக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல. அடுத்து விநாயகரின் வாகனம் எலி. எலி எதையும் கடித்துத் திண்ணும் குணமுடையது. அதன் பற்கள் வளைந்து கொண்டேயிருப்பதாகவும் அதை மழுங்கச் செய்யவே எலி எதையாவது கொரித்துக் கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எலி நமது ஐம்புலன்களை குறிக்கிறது. புலன்கள் ஒருபோதும் திருப்தி அடைவதில்லை. புதிய புதிய அனுபவங்களை தேடுகின்றன. புதிய ருசிகளை நாடுகின்றன. அவற்றை கட்டுப்படுத்தா விட்டால் அவை வளர்ந்து கொண்டேயிருக்கும். எனவே ஞானி புலன்களை அடக்கி ஆள்கிறான். அவற்றை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருகிறான். விநாயகர் முன்னுள்ள எலியும் அவரது ஞானத்தின் முன் அடிபணிந்து நிற்கிறது. தனது இயல்பான திண்ணும் குணத்தையும் விட்டொழித்து நிற்கிறது.

விநாயகர், ஈசன் – பார்வதி தம்பதியின் மகன். பிராண நாயகன் ஈசன். பூமியின் தாய் பார்வதி. அதாவது ஆத்மா ஈசன். உடல் பார்வதி. இவர்களின் மகன் விநாயகர் ஞானத்தில் சிறந்தவனாகத் திகழ்கிறான். ஓம் கணேசாய நமஹ என்று சொல்லி காரியங்களைத் தொடங்குகிறோம். இதற்கு என்ன பொருள் என்றால், நான் செய்யப் போகும் செயலில் அறிவு என்னை வழி நடத்தட்டும் என்பதாகும். கணபதி தான் முதற் கடவுள். எல்லா சடங்குகளுக்கும் முன்னதாக விநாயகரை துதிக்கவேண்டும் என்ற வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.

– கிஷோர் அஸ்தானா

 

(Visited 478 times, 1 visits today)
Marquee Powered By Know How Media.
Loading...